×

‘பிபர்ஜாய் புயல்’ காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றம்: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!

குஜராத்: ‘பிபர்ஜாய் புயல்’ காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியிறப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது. இந்த புயல் மாண்ட்வி கராச்சி இடையே வரும் 15ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் மழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கட்ச், தேவபூமி, துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட், மோர்பியில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரையை ஒட்டி, மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசும் காற்றின் வேகம் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என்றும், ஜூன் 14ம் தேதி காலை காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜூன் 15ம் தேதி கட்ச்,தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜுனகர் மற்றும் மோர்பி மாவட்டங்களில் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: ”புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த 8,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்றிய அரசு, மாநில அரசு, இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ‘பிபர்ஜாய்’ புயலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்து வருகின்றனர். 1.5 முதல் 2 லட்சம் சிறிய மற்றும் பெரிய விலங்குகள் கூட பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார். மேலும், குஜராத்தில் ஜக்கவு துறைமுகப் பகுதியில் தயார் நிலையில் இருக்கும் புஜ் ராணுவ தளத்தையும் பார்வையிட்ட அமைச்சர், குஜராத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

The post ‘பிபர்ஜாய் புயல்’ காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றம்: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Bibarzai Storm ,Union Minister ,Mansuk Mandavia ,
× RELATED ராஜபுத்திரர்கள் பற்றி அவதூறு பேச்சு...